search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமரச பேச்சுவார்த்தை"

    அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சமரச குழு, பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதற்காக வழக்கின் மனுதாரர்கள் நேற்று இந்த குழு முன் ஆஜரானார்கள். #Ayodhya
    பைசாபாத்:

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி நியமித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 3 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    இந்த குழு ஒரு வாரத்துக்குள் சமரச பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 8 வாரங் களுக்குள் அதை முடித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையை உத்தரபிரதேசத்தின் பைசாபாத்தில் நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு தங்கள் உத்தரவில் கூறியது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டது. இதற்காக பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அறையை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. பின்னர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்காக நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவினர் நேற்று முன்தினம் பைசாபாத் சென்றனர். பின்னர் நேற்று அவர்கள் அவாத் பல்கலைக்கழகத்தில் சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதற்காக வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வக்கீல்களுடன் சமரச குழு முன் ஆஜராகினர். இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது. இதற்காக சமரசக்குழுவினர் 3 நாட்கள் பைசாபாத்திலேயே தங்கி இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சமரச பேச்சுவார்த்தையை முன்னிட்டு அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறு பைசாபாத் மாவட்ட நிர்வாகத்துக்கு சமரசக்குழுவினர் அறிவுறுத்தி இருந்தனர். அத்துடன் அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் மற்றும் அவர்களது வக்கீல்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி இருந்தனர்.

    அதன்படி அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் சமரசக்குழு முன் ஆஜராவோரை தவிர வேறு யாரையும் போலீசார் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
    ×